பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் : குறள் - 972

Books

கரூவூர் இரா.பழனிச்சாமி அவர்களின் கட்டுரை

இந்திய ஏவுகணை நாயகன்

முனைவர் ..ஜெ. அப்துல் கலாம்

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று – குறள்-236

என்ற வள்ளுவர் வாய்மொழிக்கிணங்க வாழ்ந்த தலைவர்களில் தாம் முற்பட்ட  துறைகளில் புகழோடு விளங்கியவர்.  அக்னி ஏவுகணை நாயகனாக விளங்கி   இந்தியாவை  ஒரு வல்லரசு நாடாக மாற்ற முனைந்து ஏவுகணைக்கு விதையிட்ட பெருமைமிக்க அறிவியல் மேதை அப்துல் கலாம் அவர்கள்   அற்புதமான மனித நேயமிக்க பண்பாளர், எளிமை, பொதுவாழ்வில் நேர்மை, இந்திய முதல் குடிமகனாய் இருந்தும் அவர் காட்டிய பணிவு என பல வியக்கத்தக்க சிறப்புகளுக்கு உரியவர்.

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் அவர்கள் 1931ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரத்தில் பிறந்தார்.  இராமேஸ்வரத்தில் பள்ளிக் கல்வியை முடித்த அவர், மேற்படிப்புக்காக திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு 1954-ஆம் ஆண்டில் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். தொடர்ந்து, 1955-ம் ஆண்டில் சென்னை எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் விண்வெளி பொறியியல் படிப்பில் சேர்ந்து முதுகலைப் பட்டமும் பெற்ற அவர் 1960-ம் ஆண்டில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் முதன்மை விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார்.

முதலில் இந்திய ராணுவத்துக்காக சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்துக் கொடுத்தார். பின்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) திட்ட இயக்குனராக தனது ஆராய்ச்சி பணிகளைத் தொடர்ந்தார். 1980-ஆம் ஆண்டு எஸ்.எல்.வி.-3 ராக்கெட் மூலம் ரோகினி-1 என்ற செயற்கைக் கோளை விண்ணில் ஏவியதில் முக்கிய பங்காற்றினார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.  இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது.

1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றி இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய  அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் தந்தை என போற்றப்படுகிறார்.

பத்ம பூஷன், பத்ம விபூஷன், பாரத ரத்னா, தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது, வீர் சவர்கார் விருது, ராமானுஜன் விருது, அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம், கிங் சார்லஸ்-II பட்டம், பொறியியல் டாக்டர் பட்டம், சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது, ஹூவர் மெடல், பொறியியல் டாக்டர் பட்டம், சட்டங்களின் டாக்டர், சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது என இந்திய அரசின் உயர் விருதுகள் மட்டுமின்றி, பல்கலைக் கழகங்கள் அவருக்கு அளித்த கவுரவ டாக்டர் பட்டங்கள் மேலும் ஏராளமான சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார்.

அக்னி சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள், அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை ஆகியவை  அப்துல் கலாம் எழுதிய நூல்கள்  ஆகும்.  எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர். நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானவர்கள் குழந்தைகள், இளைஞர்கள்.  இளைய சமுதாயம்  அவர்கள் காணும் இலட்சிய கனவு.  நம்மால் எதையும் செய்ய முடியும் என்ற உள்ள உறுதி உள்ளவர்கள் குழந்தைகள் என நம்பினார்.   “நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்” என்ற நம்பிக்கை ஊட்டியவர்.

மனித நேய சிந்தனையாளர் என்பதற்கோர் எடுத்துக்காட்டு:

ஒரு முறை   செய்தி தாள் நிருபர்கள், நீங்கள் விஞ்ஞானியாகவும்,  குடியரசு தலைவர் பொறுப்பிலும் இருந்துள்ளீர்கள், உங்கள் சாதனைகளில் மிகப் பெரிய சாதனையாக எதைக் கருதுகிறீர்கள்  எனக் கேட்க அதற்கு அவர் நான் ஒரு பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இறுதியில் தேசிய கீதம் பாடப்பட்டது.  கடைசி வரிசையில்  இருந்த குழந்தைகளால் எழுந்து நிற்க முடியவில்லை.  தேசிய கீதம் முடிந்தவுடன் அங்கு சென்று பார்த்தேன். அந்த   குழந்தைகள்  போலியோவினால் தாக்கப்பட்டு  4 கிலோவிற்கு மேல்  எடையுள்ள செயற்கை கால்கள் பொறுத்தப்பட்டு அவர்களால் சரியாக  நடக்க முடியவில்லை என்பதை அறிந்தேன். உடனே எனது ஆய்வகத்திற்கு வந்தேன். செயற்கை கால் குறித்து தீவிரமாக சிந்தித்தேன்.  அப்போது ராக்கெட் செய்வதற்கு பயன்படத்தக்கூடிய  எடை குறைவாயுள்ள, உறுதியான ஒரு பொருளை வைத்து வெறும் 400 கிராம் எடையுள்ள செயற்கை காலை கண்டுபிடித்து  குழந்தைக்கு பொருத்தினோம்.  உடனே குழந்தை துள்ளிக் குதித்து.  மற்ற  குழந்தைகள் போன்று  மகிழ்ச்சியுடன் நடந்தது.  அது தான் மிகப் பெரிய சாதனை எனக் கருதுகிறேன்.

மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் வெளியிட்ட  நானும் தோழர் ஞான அய்யாபிள்ளை அவர்களும் இணைந்து எழுதிய “மனித நேயம் மலரட்டும்” என்ற நூலை அப்துல் கலாம் அவர்கள் நூற்களை படிப்பதில் ஆர்வம் காட்டுபவர் என்பதை அறிந்த காரணத்தாலும், அவர் குடியரசுத் தலைவர் பொறுப்பில் உள்ளதால் நமது நூலை படிக்க நேரம் கிடைக்காது என்றாலும் அவர் கையில் தவழ்ந்து மேலோட்டமான பார்வையிட்டு அவர் நூலகத்தில் இடம் பெறும் பாக்கியமாவது கிடைக்கட்டுமே என்ற நோக்கில் அனுப்பியிருந்தேன்.  ஆனால் அவர் மனித நேயம் மலரட்டும் என்ற நூலை முழுமையாக படித்து “தங்களது கடிதமும், ‘மனித நேயம் மலரட்டும்’ என்ற நூலும் கிடைத்தது. பக்கம் 63இல் ‘நல்லதை எண்ணி நல்லதை செய்வோம்’ என்ற பகுதி நன்றாக எழுதப்பட்டுள்ளது. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டு கையொப்பமிட்டு  அனுப்பியிருந்தார்.. மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றோம்.  இதை விட வேறு பரிசும் பாராட்டும் நம்மை பெருமை படுத்துமா என வியந்தேன்!  சாதாரண எழுத்தாளனைக் கூட பாராட்டி ஊக்குவிக்கும் பெருந்தன்மை கொண்டவர்.

இன்றைய காலங்களில் சாதாரண நகராட்சி முதல், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநில, மத்திய, அமைச்சர்கள் உள்பட பொறுப்பேற்றவர்கள்  கூட மக்கள் நலன் மறந்து, கொள்கை மறந்து, சில ஆண்டுகளில் கோடி கோடிகளில் கொள்ளை அடிக்கும் இக்கால கட்டத்தில் நாட்டின் நலன் மட்டுமே கருத்தில் கொண்டு “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் கொண்டவர். 2002- 2007ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். தங்கள் குடும்பத்தினர் குடியரசு மாளிகையில் தங்கிய செலவைக் கூட தனது வருமானத்தில் அரசுக்கு செலுத்தியவர்.  தான் பொறுப்பேற்கும் போது கொண்டு வந்த 2 சூட்கெஸ்களுடன் திரும்பிச் சென்றவர். தூய்மையான தலைவராக விளங்கியவர்.

இந்தியாவின் ஏவுகணை நாயகன், விஞ்ஞான வளர்ச்சி தந்தை, தலைசிறந்த விஞ்ஞானி சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், ‘திருக்குறள் வழி நடந்தவர்’ என்றும், ‘இளைஞர்களின் எழுச்சி நாயகன்’ என்றும் போற்றப்படும் பன்முகத் தலைவர் என நம் அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் உலகம் போற்றும் விஞ்ஞானியான அப்துல் கலாம் அவர்கள் தன்னுடைய பொன்மொழிகளாலும் விதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அவையில் உலகம் போற்றும் உன்னத தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 79 ஆவது பிறந்த நாளின் போது “உலக மாணவர் தின”மாக அறிவிக்கப்பட்டது.  அவர் பெயரில் விருதுகளும் வழங்கப்படுகிறது.

அவர் காட்டிய வழி நடப்போம். வாழ்க வளர்க அவர் புகழ் !

தமிழால் இணைவோம்! தரணியை வெல்வோம்!!

Get in touch with us